Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 29 ஜூன், 2012

முதல் பாடலை அழுது கொண்டே பாடினேன்

பாடலோடு உற்சாக துள்ளல் நடனமென தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி ரசிகர்களை மகிழ்விப்பவர் மொகமட் வஃபா தினக்குரலின் சகோதர வெளியிடான உதயசூரியனுக்கு அளித்த பேட்டி

நேர்காணல்:எஸ்.ரோஷன்

இசை ரசிகனின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் மாறுகிறது. இரசனை ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது! ஆக இசைத்துறையில் ஜெயிப்பதற்கு ஒவ்வொரு கலைஞனும் ஒரு வித்தியாசத்தை, புதுமையைக் காட்ட வேண்டியிருக்கிறது!
பாடலோடு உற்சாக துள்ளல் நடனம் என தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி ரசிகர்களை மகிழ்விப்பவர் மொகமட் வஃபா!
இலங்கை இசை ரசிகர்களுக்கு மிகப் பரிச்சயமான வஃபா இந்தவாரம் பேஸ்புக் பகுதியில்!
ஹாய்! பசுமையும் இயற்கை அழகும் மிகுந்த புசல்லாவை தான் என் சொந்த மண்.
தந்தை ஆதம் பாவா, தாய் பெமீலா, நான் உட்பட நான்கு ஆண் சகோதரர்கள், எல்லோருக்கும் செல்லமாய் ஒரு தங்கை என அழகான அன்பான குடும்பம்.
தந்தையும், தாயும் கலையில் அதிக நாட்டம் உடையவர்கள். எனது தந்தை தேசிய சேவையில் ""பி'' தரத்து பாடகரும் கூட! இருந்தும் எனக்கு ஆரம்ப காலத்தில் இசையில் ஆர்வம் இருக்கவே இல்லை. 8ஆம் ஆண்டு வரை புசல்லாவை தேசிய பாடசாலையிலும் 9ஆம் ஆண்டிலிருந்து உயர்தரம் வரை எனது தந்தையின் சொந்த ஊரான சம்மாந்துறை மத்திய கல்லூரியிலும் படித்தேன். பின்னர் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பாடத்தைப் பெற்று தெகிவளையில் ஒரு தனியார் கம்பனி ஒன்றில் கடமையாற்றினேன்.
என்னுடைய இந்த காலகட்டங்களை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. இளமைக் காலம் தேடல் நிறைந்த காலம் என்று கூறலாம்.
நான் சம்மாந்துறையில் படிக்கும் போது தான் எனக்கு இந்த
பாடும் ஆர்வம் ஒட்டிக் கொண்டது. நான் முதல் முதல் பாடிய அனுபவம் மறக்க முடியாதது. நான் சாதாரண தரத்தில் படிக்கும் போது வகுப்பறையில் நண்பர்களுடன் சேர்ந்து பாடிக்கொண்டிருப்பேன்.
ஒருசமயம் எங்கள் பாடசாலையில் கலை விழா! விழாவில் எமது வகுப்பு சார்பாக ஒரு நிகழ்ச்சியை வழங்க வேண்டும். அக்காலத்தில் சும்மா ஒரு கூட்டத்துக்குள் நடப்பதே எனக்கு கூச்சத்தை தரும். நண்பர்களில் ஒருவன் திடீர் என்று வகுப்பறைக்கு வந்திருந்த ஆசிரியர்களிடம் வஃபா நல்லா பாடுவான். இம்முறை அவன் நிகழ்ச்சி செய்வான் என்று சொல்லி விட்டான். எனக்கு ""குப்'' என்று வியர்த்துவிட்டது.
வகுப்பறைக்கு வந்திருந்த ஆசிரியர்கள் என்னை பாடச் சொல்லி கேட்டார் கள். நான் மறுத்தேன். அவர்களும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக என்னை சுமார் 15 நிமிடமாக வற்புறுத்த நானும் பிடிவாதம் மிக்க வேதாளமாக மறுத்துக் கொண்டிருந்தேன்.
இறுதியில் ஆத்திரம் கொண்ட
வகுப்பாசிரியர் என்னை பிரம்பால் அடித்துவிட்டார்.
கண்களில் கண்ணீர் நிறைந்து வழிய நான் பாடினேன். பாடலைக் கேட்டுவிட்டு எனக்கு நண்பர்களும் ஆசிரியர்களும் நீ நன்றாக பாடுகிறாய் என்று தட்டிக் கொடுத்தனர்.
கலை நிகழ்வு இடம்பெற்ற தினம் முழுப் பாடசாலையின் கவனத்தையும் என்வசம் ஆக்கிக்கொண்டேன். கை தட்டல்களை பெற்றேன்.
அந்த முதல் கை தட்டல்தான் எனது பாடும் ஆர்வத்திற்கு தொடக்
கமாக அமைந்தது.
(மிகுதியை அடுத்த வாரம் சொல்கிறேன்)

வெள்ளி, 8 ஜூன், 2012

என்னை அடையாளப்படுத்திய இசை இளவரசர்கள்

ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும்,அறியப்பட்டுவரும் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ''நான்'' திரைப்படத்தில் இசையமைப்பாளர்விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளள கவிஞர் அஸ்மின் தினக்குரலின் சகோதர வெளியிடான உதயசூரியனுக்கு அளித்த பேட்டி
நேர்காணல்.எஸ்.ரோஷன்


கவிதை எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே நான் பாடல் எழுதிக் கொண்டிருந்தாலும் என்னை சரியாக நெறிப்படுத்தி பட்டை தீட்டி முழு இலங்கைக்கும் என்னை அடையாளப்படுத்தியது சக்தி கூங யினால் 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ""இசை இளவரசர்கள்'' நிகழ்ச்சியென்றால் மிகையில்லை. அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்த ஷியாவுக்கு இவ்வேளையில் நான் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய திரைப்பட பாடலாசிரியர்களை இசையமைப்பாளர்களை இயக்குநர்களை சந்திக்கும் வாப்பு எனக்கும் கிட்டியது. எமது ஹம்சத்வனி குழுவுக்கு இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பாடல் உருவாகும் கதைச்சூழலை சொல்லியிருந்தார். இசையமைப்பாளர் பரத்வாஜ் கதைக்கு இசையமைக்க வேண்டிய நுணுக்கங்களை சொல்லித்தந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பாடலாசிரியர்களான பா.விஜ, நா.முத்துக்குமார், சினேகன், விவேகா போன்றோர்களை சந்தித்து பாடல் எழுதும் நுட்பம் பற்றி என்னால்
கற்க முடிந்தது.
மோகனின் இசையில் எனது வரிகளுக்கு ரணில் மற்றும் சுவர்ணியா ஆகியோர் "வா வா அன்பே நீ வா...' என ஆரம்பிக்கும் பாடலை உருவாக்கினோம். அதுவே ஒலி ஒளி வடிவில் வெளிவந்த எனது முதல் பாடலாகும்.
அதன் பின்னர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய "எங்கோ பிறந்தவளே' என ஆரம்பிக்கும் பாடல் சர்வதேசமெங்கும் மிகுந்த வரவேற்பை பெற்று பலரதும் கைதட்டல்களை எமக்கு பெற்றுத்தந்தது. டிரோன் பெர்ணான்டோ, நலிந்த, ராஜ் தில்லையம்பலம், ஆனந்த், விமல்ராஜா, வேரணன் சேகரம், காதல்வைரஸ் போன்ற நம் நாட்டு இசைக் கலைஞர்களோடும் புலம்பெயர் கலைஞர்களோடும் நான் பணியாற்றியுள்ளேன்.
இசையமைப்பாளர் டிரோனின் இசையில் நான் எழுதிய "புறப்படு தோழா' பாடல் வியர்வையின் ஓவியம் நிகழ்வில் முதலாமிடம் பெற்று 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை எனக்கு பெற்றுக் கொத்தது.
அதே போன்று 2011ஆம் ஆண்டு வியர்வையின் ஓவியம் நிகழ்வில் ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய "எங்கோ பிறந்தவளே' மீண்டும் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை எனக்கு பெற்றுத்தந்தது. அதன் பிறகு ஜெயந்தனின் இசையில் நான் எழுதிய ‘காந்தள் பூக்கும் தீவிலே’ பாடலை தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் புலம் பெயர்ந்த நம்மவர்கள் என பலரும் பெரிதாகப் பாராட்டினார்கள். பாடலை ஜெயந்தனுடன் சேர்ந்து அவரது சகோதரி ஜெயப்பிரதா பாடியிருந்தார். இந்தப் பாடலை ரசித்து இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அவரது அடுத்த படத்தில் எனக்கு வாப்புத் தருவதாக சொல்லியிருந்தார். சில உள்ளூர் வானொலிகள் எமது இந்தப் பாடலை கண்டுகொள்ளாத நிலையில் வெற்றி வானொலி ‘விடியல்’ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது. ஆனால் புலம்பெயர் நாடுகளில் இந்தப் பாடல் ஒலிக்காத வானொலி நிலையங்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எமது பாடலை ஒலிபரப்பின. எமது நாட்டு ரசிகர்கள் இந்தப்பாடலை கேட்காமல் இருப்பது துரதிர்ஷ்டமே. ஙுOக்கூக்ஆஉ இணையத்தளத்தில் இந்தபாடலை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர். இலங்கையில் வெளிவந்த தமிழ் பாடல்களில் அதிக ரசிகர்கள் பார்வையிட்ட பாடல் என்ற சாதனையும் இப்பாடல் நிகழ்த்தியுள்ளது.
இதன் பிறகு திரைப்படத்தில் பாடல் எழுதுவது, முதலாவதாக எனக்கு ‘பனைமரக்காடு’ திரைப்படத்தின் மூலமே சாத்தியமானது. இயக்குநர் கேசவாஜின் இயக்கத்தில் விமல்ராஜாவின் இசையில் ‘உயிரிலே’ என ஆரம்பிக்கும் பாடலை எழுதியிருந்தேன். இந்தப்பாடலை பின்னணி பாடகர் ஆனந்த் பாடியிருந்தார்.
அதன்பிறகு பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் விஜ அன்ரனியின் இசையில் ‘நான்’ என்ற திரைப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். இந்தப் பாடலில் எனக்கு வாப்பு கிடைத்தது சர்வதேச ரீதியாக வைத்த போட்டி ஒன்றின் மூலமே ஆகும்.
இசையமைப்பாளர் விஜ அன்ரனி பல புதிய பாடகர்களை பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். எனவே தான் தயாரித்து, இசையமைத்து, கதாநாயகனாக அறிமுகமாகும் ‘நான்’ திரைப்படத்தில் புதிய பாடலாசிரியரை அறிமுகம் செயும் நோக்கோடு தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் வாயிலாக ஒரு போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். போட்டியில் வெற்றி பெறுபவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவருக்கு வாப்பளிப்பதாக அறிவித்திருந்தார். அவரால் வழங்கப்பட்ட கதைசூழல், இசைக்கேட்ப நானும் பாடலை எழுதி அனுப்பியிருந்தேன். பல மாதங்கள் கடந்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை திடீரென ஒருநாள் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்து சொன்ன அவர் போட்டியில் நான் வெற்றியீட்டியதாக அறிவித்ததோடு உடனே சென்னைக்கு வருமாறு அழைத்திருந்தார்.
நான் சென்னை சென்று இரண்டு நாட்கள் அவரோடு தங்கியிருந்து முழுப்பாடலையும் எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருக்கின்றேன். பாடல் வெளியீட்டு விழா மிகவிரைவில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. அதற்கும் என்னை அழைக்க இருக்கின்றனர். விஜ அன்ரனி பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். கடின உழைப்பாளி. தனது ஒவ்வொரு இரவையும் பகலாக்கி உழைத்ததினால்தான் இன்று அவரால் முன்னணி இசையமைப்பாளர்கள் வரிசையில் இடம்பிடிக்க முடிந்துள்ளது. தெரிந்தவர்களையே தெரியாது என்று கூறும் வறட்டு சிந்தனையுள்ள படைப்பாளிகளுக்கு மத்தியில் அவர் பண்பாளர். அவரோடு பணிபுரிந்த அந்த இரண்டு நாட்களும் என் வாழ்வில் மறக்கமுடியாத அழகிய நாட்கள்.
‘நான்’ திரைப்படம் என்னைப்போன்று முன்னேறத்துடிக்கும் இளைஞனின் கதை. முற்றிலும் மாறுபாடான கதைக்களம். நான் நிச்சயம் வெற்றிபெறும். இத்திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரைத்துறையில் எனக்கு மட்டுமல்ல இலங்கை கலைஞர்கள் பலருக்கும் கதவு தானாக திறக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.

வெள்ளி, 1 ஜூன், 2012

நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’

ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும்,அறியப்பட்டுவரும் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ''நான்'' திரைப்படத்தில் இசையமைப்பாளர்விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளள கவிஞர் அஸ்மின் தினக்குரலின் சகோதர வெளியிடான உதயசூரியனுக்கு அளித்த பேட்டி

நேர்காணல்.எஸ்.ரோஷன்

வசந்தம் TV-யில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரியும் கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும், அறியப்பட்டு வருகின்றார்.
சக்தி TV-யினால் நடாத்தப்பட்ட ‘இசை இளவரசர்கள்’ போட்டி நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர், தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ஜனாதிபதி விருது(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் (2003)
பெற்றுள்ளதோடு 2 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010,2011) அகஸ்தியர் விருது
(2011), உட்பட 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
சுபாசெவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘பனைமரக்காடு’ தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் இவர் ஜீவா சங்கரின் இயக்கத்தில் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ‘நான்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளார்.

வணக்கம்... நான் கவிஞர் அஸ்மின்! இலங்கையின் தென்கிழக்கு பிராந்தியத்தில் நாட்டார் பாடல்களின் விளைநிலங்களில் ஒன்றாக விளங்கும் பொத்துவில்தான் நான் பிறந்த இடம்.
ஆரம்பம் முதல் உயர்தரம் வரை பொத்துவில் மத்திய கல்லூரியில்தான் கல்வி கற்றேன். இப்பொழுது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் கல்வியை தொடர்வதோடு வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றேன்.

நகரத்தின் புகையை குடித்து வாழ்பவர்களை விட கிராமத்தின் புழுதியை குடித்து வளர்பவர்களுக்கு நன்றாகவே கவிதை வரும். என் கிராமமே அழகிய கவிதை. அதை வாசிக்க வாசிக்க நானும் கவிஞனாக மாறிவிட்டேன்.

ஒரு கவிஞனை கற்பித்து வளர்க்க முடியாது. ஒருவன் கவிஞனாக மிளிர்வதற்கு கருவிலே திருவாக வேண்டும். தான் வாழும் காலத்தின் கோலத்தை வார்த்தைக் கோடுகளால் வரைந்துவிடும் கவிஞனின் நாளத்திலே, நெஞ்சின் ஆழத்திலே கற்பனைத் தீ உற்பத்தியாகி அது கவித்துவத்தோடு கனன்று எரிவதற்கு முதலில் அவன் பிறப்பின் மூலத்திலே கவிதை இருக்க வேண்டும்.
எனக்குள் பந்தலிடும் பாட்டுப் பூக்களுக்குள் இருந்து என் பாட்டன் முப்பாட்டன் முன்னோர்கள் அனைவரும் முறுவலிக்கின்றார்கள். மேலும் சிறிய வயதில் இருந்தே எனக்குள் இருந்த இடையறாத வாசிப்பும் என்னை வளப்படுத்தியிருக்கின்றது. இற்றை வரை என்னை பலப்படுத்தி வருகின்றது.
பாலர் வகுப்பில் படிக்கும் போது ஆசிரியர் பாடப் புத்தகத்தில் உள்ள பாடல்களை இசையோடு பாடிக்காட்டுவார். அதிலே எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் ஐந்தாம், ஆறாம் தரங்களில் படிக்கின்றபோது புத்தகத்தில் உள்ள பாடல்களை ஓசை நயத்தோடு நானும் பாட ஆரம்பித்து விட்டேன். அது இற்றைவரை தொடர்கின்றது. இப்பொழுதும் பாரதி, பாரதிதாசன், காசியானந்தன், மஹாகவி, நீலாவாணன், சுபத்திரன் கவிதைகளை ரசித்து ஓசையோடு பாடும் பழக்கம் இருக்கின்றது. இந்த நிகழ்வும் என்னை கவிஞனாக செதுக்கியிருக்கலாம்.

தரம் ஒன்பதில் கல்வி கற்கும்போதே எனக்குள் கவிஞன் இருப்பதை உணர ஆரம்பித்தேன். அதனால் கண்டதையும் ரசித்தேன், கண்களையும் ரசித்தேன், காணாமலும் ரசித்தேன். அந்த காலகட்டத்தில் பித்தளையில் கூட தங்கத்தை தேடியிருக்கின்றேன் என்பதை இப்பொழுது நினைக்கும்போது ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் மறுபக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் அதனால்தானே இன்று நான் கவிஞனாய் போனேன்.

ஆரம்பத்தில் கவிதைகளோடு கைகுலுக்கிக்கொண்ட நான் சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து, பாடலியற்றல் என்று பலதுறைகளிலும் பயணிக்க ஆரம்பித்தேன். என்னுடைய படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள் மட்டுமல்லாது சர்வதேச தமிழ் சஞ்சிகைகள், இணைய இலக்கிய இதழ்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன.


இப்பொழுது எனது (www.kavingerasmin.com) இணையத்தளத்திலும் வலைப்பூவிலும் (www.kavinger&asmin.blogspot.com) தொடர்ந்து எழுதி வருகின்றேன்.
அன்றுமுதல் இன்றுவரை என் கவிதைகளுக்கு கிடைத்த சின்னச் சின்ன கைதட்டல்கள், பெரிய பெரிய குழிவெட்டல்கள்தான் என்னை எழுந்து நிற்கச் செய்தன. என்னை நோக்கி வந்த கேள்விக்குறிகளையெல்லாம் நம்பிக்கையோடு போராடி ஆச்சரியக் குறியாக்கினேன்.
அகில இலங்கை மட்ட கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டபோது எனக்கு கிடைத்த ‘ஜனாதிபதி விருது’ (2001) பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலாமிடம் பெற்றதற்காய் கிடைத்த ‘தங்கப்பதக்கம்’ (2003) என்பன மூலம் ஊமையான என் கவிதைகள் பேச ஆரம்பித்தன.
2001, 2002 ஆம் ஆண்டுகளில் ‘விடைதேடும் வினாக்கள், விடியலின் ராகங்கள்’ என இரண்டு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. கவிஞர் ஜீவகவி தொகுத்த ‘முகவரி தொலைந்த முகங்கள்’ கவிதை தொகுப்பிலும் தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் சங்கத்தினால் வெளியிடப்பட்ட ‘அடையாளம்’ கவிதை தொகுப்பிலும் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ‘கூர்மதி’ சஞ்சிகையிலும் லங்கா பத்திரிகையினால் வெளியிடப்பட்ட ‘பட்சிகளின் உரையாடல்’ தொகுதியிலும் எனது கவிதைகள் வெளிவந்துள்ளன. எனது 3ஆவது கவிதை நூலான ‘ரத்தம் இல்லாத யுத்தம்’ மிகவிரைவில் வெளிவர இருக்கிறது. நூலின் அணிந்துரையை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இதில் அடங்கியுள்ள கவிதைகளை ஆங்கிலத்தில் கலாபூஷணம் கவிஞர் மீஆத் மொழிபெயர்த்துள்ளார். நூல் இருமொழிகளிலும் மிகச்சிறப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறது. நான் அதனால் தாயாராகிக்கொண்டிருக்கின்றேன்.

(இன்னும்பகிர்வேன்.. 9.06.2012சனிக்கிழமை இதனுடைய தொடர்ச்சி வெளியிடப்படும் )