Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

புதன், 6 பிப்ரவரி, 2013

சூரியன் அறிவிப்பாளராக இருப்பதை எண்ணி பெருமை அடைகிறேன்

 சூரியன் வானொலி அறிவிப்பாளர் ????? உதயசூரியன் பத்திரிகைக்கு அளித்த நேர்காணல்.
நேர்காணல்:  எஸ்.ரோஷன்

வானொலி ரசிகர்கள் பலரை கண்ணயரவிடாமல் செய்தது சூரியனின் ரீங்காரம் நிகழ்ச்சி என்று சொல்லலாம்.  இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவரும், செய்தி வாசிப்பாளருமான லரீப் இந்த வாரம் பேஸ்புக் பகுதியினூடாக  இணைந்து கொள்கிறார்.

ஹாய் பிரண்ட்ஸ் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
 என்னுடைய சொந்த ஊர் செந்நெல் விளைகின்ற சம்மாந்துறை. அப்பா அமீர் அலி, அம்மா அவ்வா உம்மா.  வீட்டில் நான் தான் கடைசிப் பிள்ளை. இரண்டு அண்ணன்மார், ஒரு அக்கா. அக்காவின் செல்லக் குட்டீஸ். இதுதான் என்னுடைய உலகம்.
என் திறமைக்கு களம் கொடுத்தது எனது பாடசாலை (சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி). அறிவிப்பாளரானது தற்செயலாக நடந்த விடயம். நேர்முகத் தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்டு சூரியக் குடும்பத்தில் நானும் ஒரு அங்கமாக (பகுதிநேர அறிவிப்பாளராக) இருக்கின்றேன். இந்த அளவு என்னை வளர்த்துவிட்டு, ஒவ்வொரு நுட்பங்களையும் சொல்லிக் கொடுத்த பெருமை சூரியன் குடும்பத்தையே சாரும். 

நீங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பற்றி?
சூரியனின் விடிய விடிய இரவு சூரியன் மற்றும் ரீங்காரம் நிகழ்ச்சிகளையும், ரமலான் மாத முஸ்லிம் நிகழ்ச்சிகள் மற்றும் சனி,  ஞாயிறு தினங்களில் விடுமுறை   நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகின்றேன்.
இதில் ரீங்காரம் நிகழ்ச்சி நேயர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரீங்கார இரசிகர்களை கண்ணயராது காற்றோடு கதை பேச வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கவிதைகளையும் அதற்கு ஏற்ற பாடல்களையும் வழங்கி என்னால் இயலுமான அளவில் நேயர்களை சந்தோஷப்படுத்தி வருகிறேன்.

பாடசாலை அனுபவம் பற்றி?

 ஒரு தடவை  புதிதாக பாடசாலைக்கு வந்த மாணவர்களை விளையாட்டாக பகிடி வதை செய்து மாட்டிக் கொண்டு அடிவாங்கியது இன்றைக்கும் மறக்க முடியாது.
அப்புறம் பிரிவென்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாத எங்களை பிரித்து அர்த்தம் காண்பித்து சென்ற பள்ளிக்கூட கடைசி நாள் இன்னும்
என் கண்முன்னே வந்து போகிறது.

போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்களின் இலக்கு என்ன?
பரந்ததே உலகம்! சிறந்ததே          செல்வம். செல்வங்களில் சிறந்தது அறிவுச் செல்வம். அதே அறிவால்  போட்டித் தன்மையோடு போட்டி யிடும் இளைஞர்களுக்கு மத்தியில் நானும் பலரும் போற்றும்  ஓர்   சிறந்த செதி வாசிப்பாளராக மிளிர
வேண்டும் என்பதே எனது இலக்கு.

அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார்?

நிறையப் பேரை பிடிக்கும். குறிப்பிட்டுச் சொல்வதானால் நவா அண்ணா, சந்ரு அண்ணா, ரவூப் அண்ணா ஆகியோரைப் பிடிக்கும்.

சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருக்கின்ற அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?
வானில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவிற்கு ஈடாகுமா? அதேபோல உலகில் எத்தனை வானொலிகள் இருந்தாலும் அவை  சூரியனிற்கு ஈடாகுமா? எனவே அப்படியான சூரிய குடும்பத்தில் இருப்பதை எண்ணிப் பெருமையடைகிறேன்.
பிரபலங்களின் நட்பு, நாட்டு நடப்புகள் உலக விவகாரங்கள் போன்ற பல விடயங்களை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. என்னை  அடையாளப்படுத்திய பெருமை சூரியனையே சாரும்.

வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்?
2011.7.25 இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.  ஏனென்றால் இந்த நாளில்தான் நான் சூரியனில் முதன் முதலாக நவா அண்ணா மூலம் என்றென்றும் புன்னகை நிகழ்ச்சியில்   அறிமுகமாகினேன். சந்தோஷத்தின் உச்சகட்டம் எது என்பதை அன்று நான் உணர்ந்தேன்.

அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல் எது?
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்...

அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் ?
விளையாட்டு, கவிதை எழுதுதல்

உங்களுடைய (பிளஸ், மைனஸ்) என்ன?
பிளஸ்: எல்லோரோடும் இணங்கிப் போதல்
மைனஸ்: தடுமாற்றம்

அடிக்கடி கடுப்பாகும் விடயம் என்ன?
தொலைபேசி அழைப்பிற்கு பதில் இல்லாமல் இருக்கும் போது.

நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்?
""யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப்பெயல்  நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே ''
எனும் கவித்துவமான வரிகள்.


நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
அறிவிப்பளர்கள் பிறப்பதில்லை உருவாகுபவர்கள். ஆகவே அவர்களின் திறமையை பாராட்டும் நீங்கள் அவர்களுடைய சிறு சிறு குறைகளுக்காக அவர்களை விட்டு  விலகாதீர்கள்.