Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

செவ்வாய், 25 ஜூன், 2013

அம்மா சொன்ன கடைசி வார்த்தை

 சக்தி சுப்பர் ஸ்டார் சுதன் உதயசூரியனுக்கு அளித்த பேட்டி;

சக்தி தொலைக்காட்சி நடத்திய சுப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறி பல இதயங்களில் இடம்பிடித்தவர் சுதன்.

பல போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிகள் இவர் வசமாகியிருக்கின்றன. தமிழ், சிங்கள மொழிகளில் பல பாடல்களைப் பாடி முன்னேறிவரும் இலங்கையின் இளம் பாடகர் இவர்.
இவர் வெற்றி இலக்கைத் தொட்டது பற்றியும் தன் வாழ்க்கையின் கடந்து வந்த பாதை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
பிறந்தது யாழ்ப்பாணம். ஆனால் சிறுவயதிலிருந்து படித்து வளர்ந்ததெல்லாம் திருகோணமலையில். அப்பா கிருஸ்ணராஜ், அம்மா வடிவழகி. வீட்டில் ஐந்து பிள்ளைகளில் நான் கடைக் குட்டி.
 ஆரம்பம் முதல் உயர்தரம் வரை திருமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில்தான் எனது பள்ளிப்பருவம் கழிந்தது. பள்ளிப்பருவத்தில் நான் பெரிய சாதனையாளன். காரணம் 32 மாணவர்களைக் கொண்ட எங்கள் வகுப்பறையில் நான்தான் 31 ஆம் நிலை. அவ்வளவு மக்கு, படிப்பதில் ஆர்வம் அற்றவனாக இருந்தாலும் பேச்சு, மெவல்லுநர் போட்டிகளில் மாவட்ட, மாகாண மட்டங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளேன்.
எந்தவித இசைப் பின்னணியும் கொண்டிராதது எனது குடும்பம். இசையில் நாட்டம் வந்ததற்குக் காரணம் எனது அம்மாதான். அவர் சமைக்கும் பொழுது பாடும் மெல்லிய இசைப் பாடல்கள் அவரது சமையல் போலவே ருசியாக இருக்கும். என்னைப் பாட வைத்து அவர் ரசிப்பது மட்டுமல்லாது அயலவர்களையும் அழைத்து என்னைப் பாட வைத்து மகிழ்ச்சி அடைவார்.
 எனக்கும் என் நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்த எனது பாடும் திறமையை வளர்த்துக் கொள்வதற்காக கல்லூரியில் இசை கற்கச் சென்ற முதலாவது நாளே எனது சங்கீத ஆசிரியர் தந்த பரிசு இசைக்கற்பதற்கான ஆர்வத்தையே குறைத்தது. வழமையாக பாடசாலை முதல் தினத்தில் யாரும் பாடசாலைக்கு பெரிதாகச் செல்வதில்லை (அன்றைய தினம்தான் வகுப்பறை ஒழுங்கமைப்பு) அதன்வழி வந்த நானும் பாடசாலை போகவில்லை. இரண்டாம் நாள் சங்கீதப் பாடத்துக்கு முதன்முதலாக சென்றபோது முதலாவது நாள் ஏன் பாடசாலைக்கு வரவில்லையென்று என்னை கண்டித்ததை இன்னும் மறக்கமுடியாது. கைவசம் நிறைய மெட்டுக்கள் இருந்தும் பாடல் வரிகள் இருந்தும் பொருளாதாரம் பெரும் முட்டுக்கட்டையாவே இருந்தது. ஆரம்பத்தில் இசைத் தட்டு வெளியிடுவதற்காக நாங்கள் நாடியவர்களும் எங்ளை ஏமாற்றினார்களே தவிர, கைகொடுக்கவில்லை. எப்படியிருந்தாலும் எனது கல்லூரியில் நடைபெற்ற தியானம் மற்றும் பஜனைப்பாடல்களில் எனது கவனத்தை செலுத்திவந்தேன். இவ்வாறு இருக்க, எனது பாடும் திறனைக்கண்ட ஒரு ஆசிரியர் எனது கல்லூரியில் வலயமட்ட வில்லுப்பாட்டுப்போட்டிக்கு அணித்தலைவராக என்னை நியமித்தார்.
எனக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீண்டநாள் பயிற்சியின் பின் எனது முதல் மேடையை சந்திக்கத் தயாராக இருந்தேன்.
அன்று எங்களுக்கு போட்டி. வில்லுப்பாட்டுக்கான உடையில் மேடையை நோக்கிச் சென்றபோது எமது கல்லூரியின் உப அதிபர் என்னை மட்டும் நிறுத்தி பாடப்போக வேண்டாம் என்றார், அருகில் எனது மாமா கண்கலங்கியபடி என்னைப் பார்த்தார். அப்பொழுதுதான் எனது அம்மா மரணப்படுக்கையில் இருப்பது தெரியவந்தது.
உடனே கொழும்பு பெரிய மருத்துவமனைக்குச் சென்றோம். எனது அம்மாவின் நிலைகுறித்து நான் அழுதுகொண்டு சென்றேன்.
ஆனால், எனது அம்மா சிரித்தப்படி என்னை வரவேற்றார். அம்மாவிற்கு கடைசிப்பால் பருக்கச்சொன்னார்கள். அம்மா அதை குடித்தபின் என்னிடம் சொன்ன ஒரேயொரு வார்த்தை  தம்பி நல்லா படி. அம்மாவின் மரணத்தின் பின் அந்த வார்த்தை என் வாழ்க்கையையே மாற்றியது. நன்றாகப் படித்தேன். Oசஃ சித்தி எதினேன். உயர்தரத்தில் வர்த்தக பாடத்தைக் கற்று அம்மாவின் ஆசியோடும், அப்பாவின் உறுதுணையோடும் பல்கலைக்கழகம் தெரிவானேன். இதில் மறக்க முடியாத அனுபவம் என்னவென்றால் எனது வகுப்பாசிரியரிடம் (5ஆம் ஆண்டு தொடக்கம் 9 ஆம் ஆண்டு வரை)  பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மற்றைய மாணவர்களுடன் நானும் சென்றேன். வந்த எல்லா மாணவர்களுக்கும் வாழ்த்தி விட்டு என்னைப் பார்த்து நீ எதற்காக வந்தா எனக் கேட்டார்.
 நானும் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளேன் எனக் கூற  கண்கலங்கியவாறு என்னை கட்டியணைத்தார்.
எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தது. நான் பல்கலைக்கழகம் வந்து ஆறு மாதத்தில் எனது அப்பாவின் இழப்பையும் சந்தித்தேன். இறுதியாக அப்பாவைப் பார்த்தது, என்னை பல்கலைக்கழகத்திற்கு வழியனுப்பியபோது சிரித்தவாறு கைகளை அசைத்த அந்த நிமிடங்கள்தான் இன்னும் என் மனம்விட்டு நீங்காமல் இருக்கின்றது.
பின்பு பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் குளியலறைப் பாடகன்தான். பின்பு எனக்கென ஒரு துணையை   தேடிக்கொண்டேன், நல்ல நண்பர்களையும் சேர்த்துக்கொண்டேன். அவர்களின் தூண்டுதலில் ரோட்டெரி கழகப் பாடல் போட்டிக்குச் சென்று இரண்டாம் இடம் பெற்றேன். பின்பு தேசிய இளைஞர் பேரவையினால்  தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட பாடல் போட்டியில் இரண்டாம் இடம், சக்தி சுப்பர் ஸ்டார் என எனது பாடல் பயணம் நீண்டது. மக்களின் ஆசியுடனும் நண்பர்களின் துணையுடனும் இறுதிப்போட்டிக்கு தெரிவானேன். இந்த வெற்றிக்கு எனது நண்பன் குணூடிண்ட ஈடிடூச் னுடைய உதவிக்கு நான் என்ன செதாலும் ஈடில்லை. இதன்போது எனது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களின் ஊக்குவிப்பும் எனது இசைப் பயணத்திற்கு மேலும் வலுச் சேர்த்தது.
நிகழ்ச்சியில் நான் இறுதிச்சுற்றுவரை முன்னேறியதை கௌரவப்படுத்தும் வகையில் எனது நண்பர்கள் எனக்காக ஒரு வைபவத்தினை ஒழுங்கு செதிருந்தார்கள். எமது பல்கலைக்கழக வரலாற்றிலேயே தனியொரு மனிதனுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட முதலாவது வைபவம் அது என்பது எனக்கு பெருமிதம் தந்தது.
இதற்கு எனது சகோதர மொழி நண்பர்கள், கனிஷ்ட மாணவர்கள், வேறு பீட நண்பர்கள் வந்து என்னை வாழ்த்தி கௌரவப்படுத்தினர். எனது பல்கலைக்கழக உபவேந்தரும் வருகை தந்து கேடயம் தந்து என்னை கௌரவித்தார். இந்த உதவிகளுக்கு நான் என்ன கைமாறு செயப்போகிறேன் என்று தெரியவில்லை.
இறுதிவரை நன்றிமறவாத மனம் வேண்டும் இறைவனே. இதுவரை ஏழு இசைத்தட்டுப் பாடல்களைப் பாடியுள்ளேன். அதில் பாத்தியா, சந்தோஷின் பாடல் ஒன்றுக்கு என்னை சொல்லிசை (ரெப்) எழுதுமாறு பணித்தார்கள். அவர்கள் கொடுத்த மெட்டுக்கு பத்து நிமிடத்தில் சொல்லிசை எழுதினேன். இதற்கு அவர்களிடமிருந்து கிடைத்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் நெஞ்சில் நீங்காதவை.
இதுபோன்றே சக்தியால் தயாரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பாடல்கள் இசைத் தொகுப்பில் இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன் மேற்பார்வைக்காக அழைக்கப்பட்டார். அதன்போதுதான் பாடல் பாடுவதில் எவ்வளவு நுணுக்கம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். நான் பயந்து பயந்து பாடிய அந்தப் பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 
எங்களது அடுத்த இசைத்தொகுப்பு மகுடி புகழ் தினேஸ் கனகரட்ணத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நிச்சயம் இந்த இசைத்தொகுப்பு வெற்றியடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. என்னுடைய இசை வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த எனது சகோதரர்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

எஸ்.ரோஷன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக