Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 12 அக்டோபர், 2012

சந்திக்க விரும்பிய உங்கள் ஊர் பிரமுகர்...


இசையமைப்பாளராகவும்,  பின்னணிப் பாடகராகவும், சிறந்த நடிகராகவும்
மக்கள் மத்தியில் அறியப்பட்டவர், பல விருதுகளுக்கு சொந்தக்காரர் 
 மாணிக்க விநாயகம் ! 

நேர்காணல்:எஸ்.ரோஷன்

ஒரு பாடகராக இலங்கையின் மூலை முடுக்கெங்கும் இவர் அறிமுகமாகியிருந்தாலும் இவருக்கும் இலங்கைக்கும் கலைக்குமான தொடர்பு மிக நீண்டது, இறுக்கமானது.
இலங்கை ரசிகர்களுக்கு எனது வணக்கம்!  என்னோட சொந்த பெயரே மாணிக்க விநாயகம்தான். எனது தந்தையார் வல்லுவூர் ராமையாப் பிள்ளை, உலகம் போற்றும் நாட்டிய மேதை. தாயார் ஞானசுந்தரம் அம்மாள். எனது தந்தை இந்தியாவிலும் இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் பல நாட்டிய மேதைகளை வளர்த்து விட்டவர். தற்போது அவர்கள் எல்லாம் வெளிநாடுகளில்  நாட்டிய மேதைகளாகவும், நாட்டிய ஆசிரியர்களாகவும் இருக்கின்றார்கள்.
என்னுடைய தகப்பனாரின் நாட்டிய நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணத்துக்கு பல தடவைகள் வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் யாழ்ப்பாணம் மண் செழித்த, தமிழ் செழித்த பூமி. இப்போ யுத்தத்திற்குப்பிறகு யாழ்ப்பாணம் சென்ற போது உருக்குலைந்த யாழ்ப்பாணத்தப் பார்த்து நான் பட்ட வேதனையை வார்த்தையால் சொல்ல முடியாது.
உடைஞ்சு உருக்குலைஞ்சு போயிருந்தாலும்  அந்த மக்களோட பாசமும் பண்பும் இன்றும் மாறல.
* இசைத்துறை அறிமுகம்
எனக்கு ஏழு வயதிருக்கும் போதே எனது மாமாவும், குருவுமான இசை மேதை சிதம்பரப்பிள்ளை யிடம் சங்கீதம் கற்றுக்கொண்டேன். இது தவிர குடும்பக்கலையுமான நாட்டியத்தையும் கற்றுக் கொண்டேன். பின்னர் இசையின் மீது கொண்ட ஈர்ப்பால் 1980களில் ஒரு வானொலியில் இசையமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டு சென்னையிலுள்ள தொலைக்காட்சிகள், வானொலிகளில் பல நூறு பாடல்களுக்கு இசையமைத்து வந்தேன்.
அதன் பின்னர் சில காலங்களில் பல ஒலி நாடாக்களுக்கு பக்திப் பாடல்கள், காதல் பாடல்கள், தேவாரங்கள், திருப்புராணங்கள் போன்றவற்றுக்கு இசையமைத்து உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தேன். அது மட்டுமல்ல, எனது இசையில் பழைய பாடகர்களில் இருந்து தற்போது உள்ள பாடகர்கள்  வரை பல பாடகர்கள் பாடியிருக்காங்க.
இதுவரையில் 15,000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து பாடியிருக்கிறேன். இதற்காக தமிழக அரசு 2003 ஆம் ஆண்டு ‘கலைமாமணி’ விருது கொடுத்தது. 2008 இல் கலைஞர் கருணாநிதி ‘இசைமேதை’ என்ற பட்டம் கொடுத்தார்.
*திரை இசைக்கு அறிமுகம்!
என்னோட பாடல்களை வித்தியாசாகர் கேட்டுவிட்டு ‘தில்’ படத்தில் முதன் முதலாக நடிகர் விக்ரமுக்காக பாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த படத்தில்  “கண்ணுக்குள்ள கெளுத்திசு என்ற பாடல் எனக்கு பெரும் புகழையும் வெற்றியையும் தேடித்தந்தது.
 அதுக்கு அப்புறமாக வித்தியாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், யுவன் சங்கர் ராஜா இப்படிப்பட்ட எல்லா இசையமைப்பாளர்களிடமும் வெற்றிப் பாடல்களைப் பாட சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பாடியிருக்கிறேன்.
*திரை உலகில் உங்கள் நண்பர்கள் பற்றி?
சமகாலத்துல வந்த நண்பர்கள்னா கார்த்திக், திப்பு, தேவன் போன்றவங்கதான்.  நாங்க எல்லோரும் பாடகர்கள். எங்களுக்குள் போட்டி உண்டு. பொறாமை இல்லை.
*திரையுலகில் உங்களுக்கு நடந்த கசப்பான சம்பவம் பற்றி?
ஒரு பாட்ட பாடுறதுக்கு இசையமைப்பாளர்கள் கூப்பிடுவாங்க. நாங்களும் போய் ரொம்ப சந்தோஷமா  பாடிட்டு பணத்தையும் வாங்கிட்டு வந்திடுவோம். அப்புறம் படம் வந்த பிறகு போய்ப் பார்த்தா நாங்க பாடின பாட்டு இருக்காது. அந்தப் பாட்டு சிலநேரம் கதாநாயகனுக்குப் பிடிக்காமல் போகும். அல்லது அவரே பாடுவதாக சொல்லியிருக்கலாம். அல்லது இசையமைப்பாளரே பாடுவதாகவும் இருக்கும். இதுபோன்ற சம்பவம் பல தடவை நடந்திருக்கு.
*இன்றைய பாடலாசிரியர்களில் உங்களுக்குப் பிடித்தவர்?
இளைய தலைமுறையில சொல்லப்போனா கவியரசு வைரமுத்துவின் மகன் கார்க்கி. இவர் ஒரு அற்புதமான பாடலாசிரியர்.
*நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார்?
நான் ரொம்ப ஆசையா சந்திக்க விரும்பியவர் உங்களுடைய (இலங்கையில்) ஊர்லதான் இருந்தாரு. அவரை பெயர் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. உங்கள் எல்லோருக்கும்தான் தெரியுமே. அவரை பார்க்க முடியாது ஏங்கும் எத்தனையோ இலட்சம் பேர்ல நானும் ஒருத்தன்.
*பாடுவது மட்டுமல்லாது நடித்தும் இருக்கின்றீர்கள். நடிப்பு அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?
பாடகராகும் வாய்ப்பு ஒரு விபத்து. அது மாதிரித்தான் நடிப்பும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியாக இருந்தது. முதன் முதலாக திருடா திருடி திரைப்படத்தில் தனுஷýக்கு அப்பாவாக  நடித்தேன். முதல் படத்திலேயே எனக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் விருது கிடைத்தது.   என்னோடு நடித்த கதாநாயகர்கள் எல்லோருமே ரொம்ப மரியாதையானவங்க. அவங்களோட இருந்ததே ஒரு அனுபவம்தான்.
*நீங்கள் இதுவரை எத்தனை திரைப்படங்களில் நடித்திருக்கிறீர்கள்?
இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஒரு 500, 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக 25 விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.
*அடிக்கடி மறக்கும் பொருள்?
நான் எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டேன். இருந்தும் ஒரு நாள் ரயில்ல வரும் போது  எனது ஒரு பையை மறந்துவிட்டு இறங்கிட்டேன். ரொம்ப தவிச்சிப் போயிட்டேன். பிறகு என் மகள் போய்த் திரும்ப அதை எனக்குக் கொண்டு வந்து கொடுத்தார். எனக்கு என்னுடைய வெற்றிலைப்பை எவ்வளவு முக்கியம்னு என் குடும்பத்திற்குதாங்க தெரியும்.
*ரசிக்கும் பாடல்கள்?
எனக்கு அதிகமாக கிராமிய இசைப் பாடல்களும், பொப்  பாடல்களும் ரொம்பப் பிடிக்கும்.
*இலங்கை ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
உங்களுடைய அன்பையும், தன்னம்பிக்கையையும் எப்பவும் இழக்காதீங்க. சந்தோஷத்த எப்பவும் மாத்திக்காதீங்க. நாங்கள் இருக்கிறோம் உங்களை சந்தோஷப்படுத்த. உங்களுடைய பொழுது போக்குக்காகத் தான் பாடிக் கொண்டு இருக்கிறோம்.

1 கருத்து:

  1. உண்மையில் நன்றாக உள்ளது.நான் முதன் முதலாக 2005ஆம் ஆண்டு இவரை தினக்குரலுக்கு நேர்கண்டேன்.இலங்கையின் அச்சு ஊடகங்களில் முதன்முதலில் இவரை நேர்கண்ட பெருமை எனக்கு இருப்பதையிட்டு இந்தவேளையில் சந்தோசமடைகின்றேன்.

    கிருஸ்ணகுமார்…

    பதிலளிநீக்கு