Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 30 நவம்பர், 2012

எனக்கு கைக்கொடுத்த வேட்டைக்காரன் பாடல்...


வசந்தம் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஷரன் ஜிதேந்திரா.  ஞாயிற்றுக் கிழமைகளில் மியூசிக் கபே நிகழ்ச்சி மற்றும் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஹரன் ஜிதேந்திரா இந்த வார உதயசூரியனில் 


நேர்காணல்: எஸ்.ரோஷன்

சினிமாவைப் போல் அறிவிப்புத்துறையும் மிகப் போட்டி நிறைந்தது. நேயர்களின் ரசனை அறிந்து, காலம் உணர்ந்து சில நிமிட பேச்சுகளில் உள்ளத்தை கொள்ளைக் கொள்வது ஒரு அபாரமான கலை! அந்தக் கலையை சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் மட்டும் ஜெயிக்கிறார்கள்.
அந்தவகையில் நேயர்களின் உள்ளத்தில் இடம்பிடித்து ஒரு வெற்றிகரமான அறிவிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் வசந்தம் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஷரன் ஜிதேந்திரா.
 ஞாயிற்றுக்கிழமைகளில் மியூசிக் கபே நிகழ்ச்சி மற்றும் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஹரன் ஜிதேந்திரா இந்த வார உதயசூரியனில் உங்களோடு தனது அனுபவங்களைப்  பகிர்ந்து கொள்கின்றார்.

ஹாய் வணக்கம்! என் சொந்த இடம் எட்டியாந்தோட்டை. அப்பா சச்சுதானந்தன் ஒரு ஓவியர், அம்மா கஸ்தூரி ராணி, செல்லத் தங்கை சரண்யபாரதி என அழகான குடும்பம்.
ஆரம்பக் கல்வியை எட்டியாந்தோட்டை சென். மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றேன். பின்னர் புலமைப்பரிசில் மூலம் கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
ஊடகத்துறைக்கு வந்தது ஒரு பெரிய கதை. இலங்கையில் ஒரு தொலைக்காட்சி  நிகழ்ச்சியின் மூலமாக கவிஞர் அஸ்மியினுடைய நட்புக் கிடைத்தது. அதன் பிறகு சிறிதுகாலம் வேலை இடமாற்றம் காரணமாக தொடர்பு இல்லாமலிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் வசந்தம் டி.வி.யின் புது வசந்தம் நிகழ்ச்சியில் பாடுவதற்காகச் சென்ற எனது நண்பன் சுதர்ஷன் மூலமாக அஸ்மியின் தொடர்பு  மீண்டும் கிடைத்தது. அவரது உதவியால்தான் அறிவிப்பாளராக இணைந்தேன்.

முதல் நாள் நிகழ்ச்சியை தொகுத்தளித்த அனுபவம்  வாழ்நாளில் மறக்கவே முடியாது. முதல்நாள் இரவு முழுதும் நான் தூங்கவே இல்லை. தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் ரொம்ப பதற்றமாக இருந்தேன்.
பதற்றமாக இருக்கும் போது பாட்டு கேட்பது வழக்கம். உடனே என்னுடைய செல்போனை எடுத்து பாட்டைப் போட்டேன். வேட்டைக்காரன் படத்துல புலி உறுமுது, பாடல் போனது. அந்தப்பாடல் என்னுள் ஏதோ ஒரு அசாத்தியமான துணிச்சலை ஏற்படுத்தியதை உணர்ந்தேன். அந்தப் பாடல் வரிகள் எல்லாம் எனக்கே எழுதின மாதிரி இருந்தது. அந்தத் தைரியத்தில் அப்படியே போய் கமரா முன்னாடி நின்றேன். நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்தேன். அதை இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்புதான் வரும். ஒரு விடயத்தை செய்யும் போது நாம் என்ன மன நிலையில இருக்கிறோம் என்பது முக்கியம் என்பதை அன்று உணர்ந்து கொண்டேன்.

போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்களின் அடையாளம் என்ன?:
எனது அடையாளத்தை , தனித்துவத்தை ரசிகர்கள்தான் சொல்லணும் என்பது  என்னுடைய கருத்து. இருந்தாலும் புதிதாக ஏதாவது பண்ணணும். 5 நிமிடம் பேசினாலும் அதில் எனக்குத் தெரிந்த ஏதாவது ஒரு விடயத்தை நேயர்களிடம் பகிர்ந்து கொள்ளணும் என நினைப்பேன்.

அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார்?  இந்திய அறிவிப்பாளர்கள் என்றால் அறிவிப்பாளராக இருந்து நடிகராக மாறிய சிவகார்த்திகேயன் அப்புறம் கோபிநாத் ஆகியோரை ரொம்பப் பிடிக்கும். இலங்கையில் இராஜேஸ்வரி அம்மாவையும் லோஷன் அண்ணாவையும் பிடிக்கும்.

வசந்தம் டி.வி.யில் கிடைத்த மறக்க முடியாத சம்பவம்:  வசந்தத்தில் ஒளிபரப்பாகும் ஆட்டோகிராப் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இராஜேஸ்வரி அம்மாவை சந்தித்து பேசியது. அதன் பிறகு சில நாட்களில் அவர் இறந்த செய்தி கேட்டதும் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.   சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக முதன் முதல் யாழ்ப்பாணம் சென்ற அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.

உங்களுடைய ரோல் மொடல்: நிச்சயமாக என்னோட அம்மாதான். ஒரு பிரச்சினையை எப்படித் தைரியமாக எதிர்கொள்வது அதை எப்படி வென்று வருவது என்ற மன தைரியத்தை அம்மாவிடம் தான் கற்றுக் கொண்டேன்.
பிடித்த நடிகர், நடிகை: பிடித்த நடிகர்  தல அஜித். சமூகத்துல உயர்ந்த அந்தஸ்துல இருந்தாலும் எளிமையும், எவருக்கும் உதவும் தன்மையும் இவர் மேல இருக்கிற பிரியத்தை நாளுக்கு நாள் அதிகரித்தது. எப்போதும் வெற்றிப் படங்களையே கொடுத்து மக்களின் இதயத்தில் இடம் பிடிக்கிறது சாதாரண விடயம்தான். ஆனாலும் தோல்விப் படங்களை கொடுத்தாலும் இவர் மீது ரசிகர்கள் வெறித்தனமா இருக்கிறாங்கன்னா அதற்கு காரணம் அவரோட உயர்ந்த பண்பு.
நடிகைகளில் ஸ்ரேயாவை ரொம்பப் பிடிக்கும். அடுத்தது காஜல் அகர்வாலையும் பிடிக்கும்.

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம்: துப்பாக்கி. இலங்கையில் முதல் காட்சி  பார்த்து விட்டு இது  மிகப் பெரிய வெற்றியடையப் போவதை உணர்ந்தேன். இத்திரைப்படத்திற்கு வரப்போகும் பிரச்சினையைப் பற்றியும் உணர முடிந்தது.

வாழ்வில் மறக்க நினைப்பது: ஒரே நாள் இரவில் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொன்ற சுனாமியின் நினைவுகள் மற்றது 2012.12.21 இல் உலகம் அழிந்து விடுமோ என்கிற நினைப்பையும் மறக்க விரும்புகிறேன்.

மறக்க முடியாத சம்பவம்: நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கலை விழா நிகழ்ச்சிக்கு அம்மா வந்திருந்தாங்க. நான் நடன நிகழ்ச்சியில் மட்டும்தான் இருந்தேன். ஆனால், போட்டி நிகழ்ச்சிகளில் பரிசில்கள் வாங்கிய மாணவர்களை பார்த்துவிட்டு நானும் அப்படி பரிசு வாங்கி இருந்தால் நல்லது என அம்மா கூறி வருத்தப்பட்டாங்க. அதற்குப் பிறகு சில வருடங்களில் நான் கவிதை, கட்டுரை, விவாதம் என எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசும் வாங்கினேன். கடைசியில் 2004ஆம் ஆண்டு நான் கல்லூரியின் இந்த மாணவர் மன்றத் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். பின்னர் நாங்கள் ஒழுங்கு செய்திருந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு என் கையால் சான்றிதழ் வழங்குவதை அம்மா பார்த்துச் சந்தோசப்பட்டாங்க. அன்று நான் பெற்ற சந்தோசத்திற்கு அளவே இல்லை. இந்த சம்பவத்தை என்றும் மறக்க மாட்டேன்.

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்: லேட்டஸ்ஸா துப்பாக்கி படத்தில் அலைக்க லைக்க அப்பிள் என்ற பாடல்.

அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள்: கொஞ்சம் கொஞ்சம் கவிதை எழுதுவேன். ரொம்ப சுமாரா பாடுவேன், அப்புரம் நல்லா சுவீமிங் பண்ணுவேன், அப்பா மாதிரி கொஞ்சம் வரைவேன்.

சந்திக்க விரும்பும் நபர்: நடிகர் அஜித் அவரைச் சந்தித்து பிறகு அப்படியே அவருடைய உதவியுடன் சுப்பர் ஸ்டார், உலக நாயகன், இசைப்புயல், கவிப்பேரரசு ஆகியோரைச் சந்திக்க ஆசை.

திருமணம் எப்போது: திருமணத்தைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. இன்னும் 2 வருடங்களில் நடக்கும் என்று நினைக்கிறேன். காதல் என்பது எல்லா மனிதர்களுக்கும் வரக்கூடிய ஒரு பொதுவான உணர்வு. அதுக்கு நான் மட்டும் விதி விலக்கல்ல.

அடிக்கடி மறக்கும் பொருள்: பேனைதான். இதுவரைக்கும் ஒரு பேனையை கூட மை முடியும் வரை பாவித்த சரித்திரமே கிடையாது.

நீங்கள் படித்ததில் உங்களுக்குப் பிடித்தது: வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை. அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள் என்ற தத்துவம் ரொம்ப பிடிக்கும்.

யாருடன் இணைந்து நிகழ்ச்சி செய்ய பிடிக்கும்: யாரோடு நிகழ்ச்சி தொகுத்து வழங்க நேர்ந்தாலும் அதை சந்தோஷமாக செய்ய வேண்டும் என்பதுவே என்னுடைய ஆசை.

உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது: நீங்கள் தோல்வியடையும் போதெல்லாம் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள். உங்களை மேலும் பலப்படுத்திக் கொள்ள இறைவன் வழங்கும் வாய்ப்புகள் என உங்கள் மனதை ஊக்கப்படுத்துங்கள்.
மேலும் எனது நிகழ்ச்சிகளை பார்த்து கருத்து தெரிவியுங்கள். காரணம் எங்கள் பலவீனம் என்ன என்பதை உணர்ந்து கொள்வதே எம்முடைய பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக