Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வியாழன், 22 நவம்பர், 2012

ராகுமான் இசையில் பாடனும்...

‘கோ’ திரைப்படத்தில் என்னமோ ஏதோ என்ற ஒரே பாடல் மூலம் உச்சத்திற்கு போனவர் பாடகர் அலப்ராஜ்.  தற்போது மாற்றான் திரைப்படத்தில் இவர் பாடிய  தீயே... தீயே... பாடல்தான் இளைஞர்களின் ரிங்டோன். 

இந்தவாரம்  அவர் உதயசூரியன் வாயிலாக உங்களைச் சந்திக்கிறார்.
நேர்காணல்: எஸ்.ரோஷன்

ஹாய் முதல்ல  எல்லோருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்! நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையிலதாங்க. நான் தமிழன் என்று நீங்க எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பீங்க. நான் தமிழன் இல்லைங்க. நான் ஒரு மலையாளி.

பாடகராக அறிமுகமாகியது எப்படி ?

எனது குடும்பம் இசைக் கலைஞர்களைக் கொண்ட ஒரு அழகான குடும்பம். என்னுடைய அம்மா பாடகி. அத்தோடு டப்பிங் குரல் கொடுப்பவர். அப்பாவும் பாடகர், இசையமைப்பாளர். இந்தக் குடும்பப் பின்னணியில் இருந்ததால எனக்கும் சின்ன வயசுல இருந்தே இசைத்துறையில் ஆர்வம் இருந்தது. இசைத்துறையில் அப்பாதான் எனக்கு பயிற்சியளித்தார். நாங்கள் இருவரும் பல மேடைகளில் பாடல்களை பாடியிருக்கின்றோம்.  எனது நண்பரான தமன் என்னை  2009 ஆம் ஆண்டு ஐயனார் திரைப்படத்திற்கு பாடுவதற்கு அழைத்தார்.  நான் இதுவரையில் 20  22 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கின்றேன். இன்னும் புதிய பாடல்களையும் பாடிக் கொண்டிருக்கின்றேன். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடியிருக்கீங்க. இதில் எந்த மொழியில் பாடுவதற்கு உங்களுக்கு இலகுவாக உள்ளது?

நான் மலையாளி என்பதாலோ என்னவோ மலையாளப் பாடல்கள் பாடுவதற்கு இலகுவாக இருக்கும்.  தமிழில பாடுவது கொஞ்சம் கஷ்டம்தான். தமிழ் மொழியில் சிலவார்த்தைகளை பாவனையாகவும் அழகாகவும் உச்சரித்துப்பாட வேண்டும் என்ற காரணத்தினால்தான். இருந்தாலும் தமிழில் பாடுவது ரொம்பப் பிடிக்கும்.

நீங்கள் பாடிய பாடலில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது ?

 கோ படத்தில என்னமோ ஏதோ... தான் என் பேவரிட். இந்தப் பாட்டுதாங்க என் வாழ்க்கையையே மாற்றியது. இதுக்கு பிறகு தான் எனக்கு பல விருதுகளும் நிறைய சந்தர்ப்பங்களும் கிடைத்தது. அதுமட்டுமல்ல இன்றைக்கு வரை ஹிட்டாகவும் இருக்குது.

நீங்க ஹீரோ மாதிரி இருக்கீங்க.  ஏதாவது திரைப்படத்தில் நடிக்கனும்னு என்று தோணலியா?

ஏங்க எக்கு தப்பா கேக்குறீங்க. படங்களில் நடிக்கிறது என்று இதுவரை நான் யோசித்தது கூட கிடையாது.
எந்த ஹீரோவுக்கு உங்களுடைய குரல் ஒத்துப்போகுமென்று நினைக்கின்றீர்கள்?

எனக்கு யாராக இருந்தாலும் பரவாயில்லை. உதாரணமாக என்னமோ ஏதோ பாட்டுக்கு யார் நடிகர் என்று தெரியாது. பிறகுதான் நடிகர்  ஜீவான்னு தெரியும். அதேமாதிரி எங்கேயும் காதல் படத்தில் நான் பாடிய  எங்கேயும் காதல் பாட்டுக்கு பிரபுதேவா  தான் திரையில வருவார் என்று தெரியாது. ஆனா ரெண்டு பேருக்குமே அந்தப்பாடல் ரொம்பப் பொருந்திப் போனது.   யார் நடித்தாலும் பரவாயில்லை எனது பாட்டு மக்கள் மத்தியில் வெளிவந்தால் அதுவே எனக்கு சந்தோஷம்தான்.
வெற்றிக்குத்தேவை திறமையா? அதிர்ஷ்டமா?
இரண்டுமே தேவை.

 தீபாவளியில் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் இருக்கா?

நான் ஒரு கிறிஸ்தவன். இருந்தாலும் சின்ன வயசுல இருந்தே தீபாவளி என்றால் எனது நண்பனுடைய வீட்டுக்குப் போவேன். அந்தத் தொடர்மாடி கட்டிடத்தில உள்ள எல்லாரும் ஒரு இடத்தில கூடி பட்டாசு வெடிப்பாங்க. ரொம்ப சந்தோஷமாகவும் அழகாகவும் இருக்கும். 

சந்திக்க விரும்பும் நபர் யார்?

நான் நிறைய இசையமைப்பாளர்களை சந்தித்திருக்கின்றேன். ஆனால் சந்திக்க விரும்பும் ஒரே ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். அவர் இசையில் பாடனும்னு இல்லாவிட்டால் அவரது பாடலுக்கு கிட்டார் வாசிக்க சந்தர்ப்பம் கிடைச்சாலே போதும்.

இலங்கை வந்த அனுபவம் பற்றி?

2010 இல் நான் இலங்கைக்கு வந்திருக்கின்றேன். கிட்டார் வாசிப்பதற்காக. நிறைய நண்பர்களை அங்கு சந்தித்தேன். கொழும்பு அனுபவம் எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது.

இன்றைய பாடலாசிரியர்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?

புதுப் பாடலாசிரியர்கள்ல வந்து மதன் கார்க்கி ரொம்பப் பிடிக்கும். அவரது வரிகளில் கவித்துவத்தோடு புதுமையும் இருக்கும். 

மாற்றான் படத்துல தீயே... தீயே... பாடல் அனுபவம் எப்படி?

ஹரிஸ் ஜெயராஜ் சேர் பாடக் கூப்பிட்டார். இரட்டை வேடத்தில நடிக்கிற சூரியாவில் ஒரு  சூரியாவுக்கு நான் பாடினேன். ஹாரிஸ் ஜெயராஜ் கூட பணியாற்றுவது ரொம்ப இனிமையான அனுபவம்.

இலங்கையிலுள்ள உங்களுடைய ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

உங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி. நீங்க தருகிற ஆதரவுதான் எங்களோட பலம். அது ரொம்ப முக்கியம். உங்களுடைய பாராட்டுக்கள் தான் எங்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றது. பாடகர்களாகிய எங்களுக்கு எப்போதும் உங்களுடைய பங்களிப்பைத் தாருங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக