Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 29 ஜூன், 2012

முதல் பாடலை அழுது கொண்டே பாடினேன்

பாடலோடு உற்சாக துள்ளல் நடனமென தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி ரசிகர்களை மகிழ்விப்பவர் மொகமட் வஃபா தினக்குரலின் சகோதர வெளியிடான உதயசூரியனுக்கு அளித்த பேட்டி

நேர்காணல்:எஸ்.ரோஷன்

இசை ரசிகனின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் மாறுகிறது. இரசனை ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது! ஆக இசைத்துறையில் ஜெயிப்பதற்கு ஒவ்வொரு கலைஞனும் ஒரு வித்தியாசத்தை, புதுமையைக் காட்ட வேண்டியிருக்கிறது!
பாடலோடு உற்சாக துள்ளல் நடனம் என தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி ரசிகர்களை மகிழ்விப்பவர் மொகமட் வஃபா!
இலங்கை இசை ரசிகர்களுக்கு மிகப் பரிச்சயமான வஃபா இந்தவாரம் பேஸ்புக் பகுதியில்!
ஹாய்! பசுமையும் இயற்கை அழகும் மிகுந்த புசல்லாவை தான் என் சொந்த மண்.
தந்தை ஆதம் பாவா, தாய் பெமீலா, நான் உட்பட நான்கு ஆண் சகோதரர்கள், எல்லோருக்கும் செல்லமாய் ஒரு தங்கை என அழகான அன்பான குடும்பம்.
தந்தையும், தாயும் கலையில் அதிக நாட்டம் உடையவர்கள். எனது தந்தை தேசிய சேவையில் ""பி'' தரத்து பாடகரும் கூட! இருந்தும் எனக்கு ஆரம்ப காலத்தில் இசையில் ஆர்வம் இருக்கவே இல்லை. 8ஆம் ஆண்டு வரை புசல்லாவை தேசிய பாடசாலையிலும் 9ஆம் ஆண்டிலிருந்து உயர்தரம் வரை எனது தந்தையின் சொந்த ஊரான சம்மாந்துறை மத்திய கல்லூரியிலும் படித்தேன். பின்னர் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பாடத்தைப் பெற்று தெகிவளையில் ஒரு தனியார் கம்பனி ஒன்றில் கடமையாற்றினேன்.
என்னுடைய இந்த காலகட்டங்களை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. இளமைக் காலம் தேடல் நிறைந்த காலம் என்று கூறலாம்.
நான் சம்மாந்துறையில் படிக்கும் போது தான் எனக்கு இந்த
பாடும் ஆர்வம் ஒட்டிக் கொண்டது. நான் முதல் முதல் பாடிய அனுபவம் மறக்க முடியாதது. நான் சாதாரண தரத்தில் படிக்கும் போது வகுப்பறையில் நண்பர்களுடன் சேர்ந்து பாடிக்கொண்டிருப்பேன்.
ஒருசமயம் எங்கள் பாடசாலையில் கலை விழா! விழாவில் எமது வகுப்பு சார்பாக ஒரு நிகழ்ச்சியை வழங்க வேண்டும். அக்காலத்தில் சும்மா ஒரு கூட்டத்துக்குள் நடப்பதே எனக்கு கூச்சத்தை தரும். நண்பர்களில் ஒருவன் திடீர் என்று வகுப்பறைக்கு வந்திருந்த ஆசிரியர்களிடம் வஃபா நல்லா பாடுவான். இம்முறை அவன் நிகழ்ச்சி செய்வான் என்று சொல்லி விட்டான். எனக்கு ""குப்'' என்று வியர்த்துவிட்டது.
வகுப்பறைக்கு வந்திருந்த ஆசிரியர்கள் என்னை பாடச் சொல்லி கேட்டார் கள். நான் மறுத்தேன். அவர்களும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக என்னை சுமார் 15 நிமிடமாக வற்புறுத்த நானும் பிடிவாதம் மிக்க வேதாளமாக மறுத்துக் கொண்டிருந்தேன்.
இறுதியில் ஆத்திரம் கொண்ட
வகுப்பாசிரியர் என்னை பிரம்பால் அடித்துவிட்டார்.
கண்களில் கண்ணீர் நிறைந்து வழிய நான் பாடினேன். பாடலைக் கேட்டுவிட்டு எனக்கு நண்பர்களும் ஆசிரியர்களும் நீ நன்றாக பாடுகிறாய் என்று தட்டிக் கொடுத்தனர்.
கலை நிகழ்வு இடம்பெற்ற தினம் முழுப் பாடசாலையின் கவனத்தையும் என்வசம் ஆக்கிக்கொண்டேன். கை தட்டல்களை பெற்றேன்.
அந்த முதல் கை தட்டல்தான் எனது பாடும் ஆர்வத்திற்கு தொடக்
கமாக அமைந்தது.
(மிகுதியை அடுத்த வாரம் சொல்கிறேன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக